செவ்வாய், 28 மே, 2013

Posted by Chief Editor On 7:43 PM

ஒரு அழகான காட்டில் காகமும் புறாவும் நண்பர்களாக இருந்தனர். இருவரின் நட்பு நெடுங்காலமாக நல்ல நட்பாகவே மலர்ந்தது. இரை தேடும் போது இருவருமே சென்று தேடுவர். ஒன்றாக சுத்தி திரிவர்.
அப்போது காகம் புறாவை நோக்கி, ” புறா நான் அழகான கூடு கட்டப்போகிறேன். இதுவரைக்கும் யாருமே கட்டியிருக்க முடியாத அளவுக்கு கட்டப்போகிறேன் ” என்று கூறியது.
புறா காகத்தை நோக்கி, ” நண்பா கூடு கட்டுவது சரி. எங்கே எந்த இடத்தில் கட்டப்போகிறாய்? ” என்று வினவியது.

காகம் உடனே, ” வேறு எங்கு நாம் எப்போதும் ஒரு மின்கம்பத்தில் உட்கார்ந்து விளையாடுவோம்ல. அங்கே தான். என்ன நண்பா சரியான இடத்தை தேர்ந்தெடுத்து உள்ளனா ” என்று புறாவை நோக்கி கேட்டது.

புறா காகத்தை நோக்கி, ” என்ன சொல்ற நண்பா! அந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம். அதுவும் மின்கம்பத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மக்களும் எளிதில் பார்க்கும் வண்ணம் உள்ளது. காற்று அடித்தால் உன்னுடைய குழந்தைகள் கீழே விழ வாய்ப்புள்ளது. அங்கே போயா கட்டப்போறே! நம்ம காட்டில எவ்வளவு இடம் இருக்கு!அங்கே கட்டிக்கொள் அதான் உனக்கும் வருங்கால குழந்தைக்கும் நல்லது ” என்று தனது விருப்பத்தை கூறியது.
காகம் கோபத்துடன், ” நண்பா! உன்னிடம் என் விருப்பத்தை சொன்னேனே தவிர ஆலோசனை கேட்கவில்லை! நீ உன் வேலையை பார்! எனக்கு எங்கு கட்டுவது என்று தெரியும்!” என்று கூறியவாறு பறந்து சென்றது.

புறாவும் காகத்தின் முட்டாள் தனத்தை நினைத்து வருந்தி நான் சொன்னது நல்லது என்று உணர்ந்து எப்போதாவது என்னிடம் வருவாய் என்று மனதில் நினைத்துக் கொண்டு அதுவும் பறந்து சென்றது.

காகமும் சில தினங்களுக்குள் புறாவிடம் சொன்ன இடத்திலேயே அழகான கூடை கட்ட பல்வேறு இடத்தில் குச்சிகளை சேகரித்து கூட்டை கட்டியது. அதற்கு 3 குழந்தையும் பிறந்தன. காகம் சந்தோஷத்துடன் தன்னுடைய குழந்தையுடன் பொழுதை கழித்தது. புறா நண்பன் சொன்னதை நினைத்து மனதிற்குள் சிரித்தும் கொண்டது. தினமும் காலையில் தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க நிறைய இடங்களுக்கு சென்று இரை கொண்டுவந்து ஊட்டும். அதே போல் பொழுது கலிந்துகொண்டிருந்தது.

வழக்கம்போல் இரை தேட வெளியில் பறந்து சென்றது காகம். அன்று காற்று பலமாக வீசியது. காகம் பத்திரமாக ஒரு வீட்டின் மறைவில் நின்று கொண்டது. அது மனதிற்குள் தனது குழந்தைகளின் நிலைமை என்ன வென்று தெரியாமல் துடித்து கொண்டிருந்தது. காற்று நின்றவுடன் விரைவாக பறந்து சென்று தனது கூட்டை பார்த்தது. தன்னுடைய மூன்று குழந்தையும் காற்று அடித்து கூடோடு கீழே விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று அழுது கொண்டே தன்னுடைய குழந்தையை எடுத்து தழுவிக்கொண்டே இருந்தது. நானே உங்களை கொண்டுவிட்டனே என் நண்பன் சொன்னதை கூட காதில் வாங்கி கொள்ளாமல் இப்படி நடந்து கொண்டேனே என்று புலம்பியது.

காகத்தின் குழந்தைகள் இறந்ததை கேள்வியுற்று நண்பனை பார்க்க வந்தது புறா. புறாவை பார்த்ததும் காகம் கட்டிப்பிடித்து கொண்டு என்னை மன்னித்துவிடு நண்பா! என் முட்டாள் தனத்தால் என்னுடைய குழந்தையை பறிக் கொடுத்தேன் என்று அழுதது. புறாவும் பரவாயில்லை தோழா! இனிமேலாவது மின்கம்பத்தில் கூடு கட்டாதே என்று ஆறுதல் கூறி பறந்து சென்றது.

கருத்து:
நல்ல விஷயங்களை யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் நல்லதே நடக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக