புதன், 29 மே, 2013

Posted by Chief Editor On 1:12 AM


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

3 கருத்துகள்: