வெள்ளி, 31 மே, 2013

Posted by Chief Editor On 4:01 AM


கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை. பின் எப்போது தான் கூடுகிறது ? கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது. கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .. 

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் 

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
johnson baby oil, amla hair oil,
clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும் 
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் 
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும் 
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள் 

குறிப்பு - நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும். கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.
Posted by Chief Editor On 3:52 AM


காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.

இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும்.



காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப்பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
Posted by Chief Editor On 3:44 AM

’கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்!’ -ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் தகவல்! ! ! 


தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும ் எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ விளக்குகள் அறிமுகம் ஆனது.

இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவ ிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்குதடை விதிக்கப்பட்டது .

இந்நிலையில், செல்போன்கள், டிவி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.மேலும் சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது.

ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். மேட்ரிட்டில்உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர ். இதுகுறித்து, ரமோஸ் கூறியிருப்பதாவது:

எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.

கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மைகொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல. எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம்.” என்று கூறியுள்ளார்.
Posted by Chief Editor On 3:38 AM


ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். ''கடமையில் கருத்தாக இருப்பான். ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.

'அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,'பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்? ' என்று கேட்டார். அவனோ,

''எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன். இப்போது கூட ஒரு பந்தயம். உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன். பந்தயம் நூறு ரூபாய்.''என்றான்.'

எனக்கு முதுகில் மச்சமே கிடையாது. நீ தோற்று விட்டாய். நீயே பார், '' என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் காட்டினார்.

மச்சம் இல்லாததால் அவனும் வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நூறு ரூபாயைக் கொடுத்தான்.

புதிய அதிகாரி பழைய அதிகாரிக்குக் கடிதம் எழுதினார். ''அவனுக்கு சரியான பாடம் கற்பித்து விட்டேன். இனி யாரிடமும் பந்தயம் கட்ட மாட்டான்,'' என்று நடந்தவற்றை விளக்கி எழுதினார்.

உடன் பதில் வந்தது.

''நீங்கள் தான் தோற்றுப் போய் விட்டீர்கள்.

புதிய இடத்தில் வேலைக்கு சேர்ந்த அன்றே உங்களுடைய சட்டையைக் கழற்ற வைப்பதாக என்னிடம் ஐநூறு ரூபாய் பந்தயம் கட்டிவிட்டுத்தான் அங்கு வந்தான். வெற்றி அவனுக்குத்தான்."
Posted by Chief Editor On 3:18 AM



















ஒவ்வொரு 
நிமிடமும் 
தாயின் அணைப்பிற்காய்
ஏங்கிக் கொண்டே இருக்கிறது
குழந்தைகள்

எதிர் பார்ப்போடு
அணைப்பிற்காய்
ஓடி வருகின்ற
குழந்தைகளை அலட்சியம் செய்யும்
அப்பாக்கள்
குழந்தைகளின்
ஏக்கம் தளும்பும் விழிகளை
பார்ப்பதே இல்லை

அம்மாவும்
அப்பாவும்
வேலையில் இருந்து வரும் வரை
அடைக்கப்பட்ட
கதவுகளின் பின்
அன்பை தேடிக் கொண்டே
இருக்கிறது குழந்தைகள்

பொம்மைகள் அரவணைக்குமா
தயார் படுத்தப்பட்ட
சுவையான உணவுகள்
பாசத்தை ஊட்டுமா

இப்படித்தான்
பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்குமான தூரம்
ஆரம்பமாகிறது

அவர்கள் பிடிக்கும் முன்பே
வண்ணத்திகள்
பறந்து விடுகின்றன

நீண்ட நாள் கிடைக்காத
தாயின் அன்பான முத்தத்தை போல

நீண்ட நாள்
காண கிடைக்காத
தந்தையின் முகத்தைப் போல..

வியாழன், 30 மே, 2013

Posted by Chief Editor On 7:44 AM

இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். தம்பி ஆஸ்பத்திரி போகனும்.


நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்.

என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும் என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில்நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

வேனம்மா எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்க. என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான். 

எதோ யோசிக்க மொபைலை எடுத்துஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.
ஹலோ முதியோர் இல்லமா?

ஆமா என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே?

மன்னிக்கவும் நாளு நாளைக்கி முன்னாடி அனதைன்னு சொல்லிட்டு ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக. முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்.

# ஆம் நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.

புதன், 29 மே, 2013

Posted by Chief Editor On 1:12 AM


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!"

செவ்வாய், 28 மே, 2013

Posted by Chief Editor On 7:49 PM

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.
“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர். 
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.
“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.
கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார். 
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!
Posted by Chief Editor On 7:43 PM

ஒரு அழகான காட்டில் காகமும் புறாவும் நண்பர்களாக இருந்தனர். இருவரின் நட்பு நெடுங்காலமாக நல்ல நட்பாகவே மலர்ந்தது. இரை தேடும் போது இருவருமே சென்று தேடுவர். ஒன்றாக சுத்தி திரிவர்.
அப்போது காகம் புறாவை நோக்கி, ” புறா நான் அழகான கூடு கட்டப்போகிறேன். இதுவரைக்கும் யாருமே கட்டியிருக்க முடியாத அளவுக்கு கட்டப்போகிறேன் ” என்று கூறியது.
புறா காகத்தை நோக்கி, ” நண்பா கூடு கட்டுவது சரி. எங்கே எந்த இடத்தில் கட்டப்போகிறாய்? ” என்று வினவியது.

காகம் உடனே, ” வேறு எங்கு நாம் எப்போதும் ஒரு மின்கம்பத்தில் உட்கார்ந்து விளையாடுவோம்ல. அங்கே தான். என்ன நண்பா சரியான இடத்தை தேர்ந்தெடுத்து உள்ளனா ” என்று புறாவை நோக்கி கேட்டது.

புறா காகத்தை நோக்கி, ” என்ன சொல்ற நண்பா! அந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம். அதுவும் மின்கம்பத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. மக்களும் எளிதில் பார்க்கும் வண்ணம் உள்ளது. காற்று அடித்தால் உன்னுடைய குழந்தைகள் கீழே விழ வாய்ப்புள்ளது. அங்கே போயா கட்டப்போறே! நம்ம காட்டில எவ்வளவு இடம் இருக்கு!அங்கே கட்டிக்கொள் அதான் உனக்கும் வருங்கால குழந்தைக்கும் நல்லது ” என்று தனது விருப்பத்தை கூறியது.
காகம் கோபத்துடன், ” நண்பா! உன்னிடம் என் விருப்பத்தை சொன்னேனே தவிர ஆலோசனை கேட்கவில்லை! நீ உன் வேலையை பார்! எனக்கு எங்கு கட்டுவது என்று தெரியும்!” என்று கூறியவாறு பறந்து சென்றது.

புறாவும் காகத்தின் முட்டாள் தனத்தை நினைத்து வருந்தி நான் சொன்னது நல்லது என்று உணர்ந்து எப்போதாவது என்னிடம் வருவாய் என்று மனதில் நினைத்துக் கொண்டு அதுவும் பறந்து சென்றது.

காகமும் சில தினங்களுக்குள் புறாவிடம் சொன்ன இடத்திலேயே அழகான கூடை கட்ட பல்வேறு இடத்தில் குச்சிகளை சேகரித்து கூட்டை கட்டியது. அதற்கு 3 குழந்தையும் பிறந்தன. காகம் சந்தோஷத்துடன் தன்னுடைய குழந்தையுடன் பொழுதை கழித்தது. புறா நண்பன் சொன்னதை நினைத்து மனதிற்குள் சிரித்தும் கொண்டது. தினமும் காலையில் தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க நிறைய இடங்களுக்கு சென்று இரை கொண்டுவந்து ஊட்டும். அதே போல் பொழுது கலிந்துகொண்டிருந்தது.

வழக்கம்போல் இரை தேட வெளியில் பறந்து சென்றது காகம். அன்று காற்று பலமாக வீசியது. காகம் பத்திரமாக ஒரு வீட்டின் மறைவில் நின்று கொண்டது. அது மனதிற்குள் தனது குழந்தைகளின் நிலைமை என்ன வென்று தெரியாமல் துடித்து கொண்டிருந்தது. காற்று நின்றவுடன் விரைவாக பறந்து சென்று தனது கூட்டை பார்த்தது. தன்னுடைய மூன்று குழந்தையும் காற்று அடித்து கூடோடு கீழே விழுந்து இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று அழுது கொண்டே தன்னுடைய குழந்தையை எடுத்து தழுவிக்கொண்டே இருந்தது. நானே உங்களை கொண்டுவிட்டனே என் நண்பன் சொன்னதை கூட காதில் வாங்கி கொள்ளாமல் இப்படி நடந்து கொண்டேனே என்று புலம்பியது.

காகத்தின் குழந்தைகள் இறந்ததை கேள்வியுற்று நண்பனை பார்க்க வந்தது புறா. புறாவை பார்த்ததும் காகம் கட்டிப்பிடித்து கொண்டு என்னை மன்னித்துவிடு நண்பா! என் முட்டாள் தனத்தால் என்னுடைய குழந்தையை பறிக் கொடுத்தேன் என்று அழுதது. புறாவும் பரவாயில்லை தோழா! இனிமேலாவது மின்கம்பத்தில் கூடு கட்டாதே என்று ஆறுதல் கூறி பறந்து சென்றது.

கருத்து:
நல்ல விஷயங்களை யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொண்டால் வாழ்க்கையில் நல்லதே நடக்கும்.
Posted by Chief Editor On 7:31 PM

முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே... இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.
அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..
ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.
அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.
அதற்கு முனிவர், ""மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.
""நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.
அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.
மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. ""என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.
""உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.
அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.
நீதி: நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.
Posted by Chief Editor On 7:17 PM

இளைஞர் ஒருவர் வண்டியை ஓட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகிக் கால்கள் இரண்டையும் இழந்தார்.

அவருக்கு மரக்கால்கள் பொருத்தப்பட்டன.


அவர் ஒருமுறை ஆப்பிரிக்காவிற்குச் சென்றார்.

அங்குள்ள காட்டுவாசிகள் சிலர் அவரைக் கடத்திச் சென்றனர்.

அந்த காட்டுவாசிகளின் தலைவன், “இன்று நமக்கு நல்ல இளைஞன் ஒருவன் உணவாகக் கிடைத்திருக்கிறான். இவனுடைய மாமிசத்தை உண்டு மகிழ்ச்சியாக இருப்போம். அதற்கு முன்னாதாக இவன் கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என்றான்.

தலைவன் உத்தரவைக் கேட்ட காட்டுவாசிகள் அந்த இளைஞனை நெருங்கினர்.

அவர்கள் இளைஞனின் கால்களை வெட்ட முயன்ற போது, அந்தக் கால்கள் கடினமான வேறு பொருளாக இருப்பதைப் பார்த்தனர். கால்கள் மரக்கட்டையாக இருப்பது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்தது. அவர்கள் பயந்து போனார்கள்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் தலைவனிடம் கால்கள் மரக்கட்டைகளாக இருப்பதைப் பற்றிச் சொன்னார்கள்.

தலைவனும் அந்த இளைஞனின் கால்களைப் பார்த்தான். அதைப் பார்த்த அவனுக்கும் பயம் உண்டானது.

தலைவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “நீங்கள் கடத்தி வந்திருக்கும் இந்த இளைஞன் மனிதனல்ல, கடவுளாகத்தானிருப்பான். இவரை வெட்ட வேண்டாம். அவரை விடுவித்து விடுங்கள்” என்றான்.

அந்த இளைஞன் விடுவிக்கப்பட்டான். அவனிடம் அவர்கள் ஆசி பெற்றுக் கொண்டனர்.

தப்பி வந்த இளைஞன், “நாம் பலவீனமாக நினைப்பவை கூட, நமக்கு சில வேளைகளில் பலமாக அமைந்து விடுகிறது. கடவுள் நமக்கு எப்போதும் தீமை செய்வதில்லை” என்றான்.

- Divya.
Posted by Chief Editor On 2:01 AM

நிலவின் ஈர்ப்பு விசையின் (moon’s gravitational force) காரணமாக பூமியில் அமைந்துள்ள கடல்களில் அலைகள் உண்டாகின்றன. உண்மையில் நிலவின் ஈர்ப்பு ஆற்றல் நிலம், மலை போன்ற அனைத்தையும் கவர்ந்திழுக்கிறது; நிலையாகவும் உறுதியாகவும் அமைந்திருப்பதால் அவை அசைந்து கொடுப்பதில்லை. 

ஆனால் கடல்களின் நிலைமை வேறானது; நிலவின் ஈர்ப்பு விசையால் நிலத்தில் அமைந்துள்ள பெரும் கடல்பகுதியின் நீர் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்கு இடம் பெயர முடிகிறது. 

இவ்விடப்பெயர்ச்சியே அலைகளாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரின் பரப்பும் கன அளவும் கடலோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவாக இருப்பதால், கடலில் ஏற்படுவது போன்று அலைகள் உண்டாக முடிவதில்லை
Posted by Chief Editor On 1:19 AM
மனித மூளையும் அதன் செயல்திறனும்.


1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்.

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபகபடுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்.

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்க முடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot)வாய்ப்புகள் அதிகம்.

மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி,மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்: மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய இனிப்பு சாப்பிடுதல்: நிறைய இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Posted by Chief Editor On 12:45 AM

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது.

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும்,போதிய போஷாக்கின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர்.

இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும்.

கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும்,தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.

மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 fatty acids’ (docosahexaenoic acid) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். தாய், சிசுவின் உடலில் ‘ஒமேகா-3 fatty acids’ அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.

பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகள்…

பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது. அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது.

முட்டை மற்றும் நட்ஸ்…

மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.

தானிய வகைகள்…

வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.

மீன்:

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இந்த ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு மட்டுமின்றி, மூளையின் செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஏனெனில் மூளையின் செயல்பாட்டிற்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மிகவும் முக்கியமானது. மேலும இது மூளைச் செல்களின் இயக்கத்தை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக ஹெர்ரிங், சால்மன், சூரை (Tuna), கானாங்கெளுத்தி, பொத்தல், நெத்தலி, மற்றும் மத்தி போன்றவை மிகவும் சிறந்தது.

இதில் ஒமேக-3 ஃபேட்டி ஆசிட்டான DHA மற்றும் EPA அதிகம் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்ற உணவுப் பொருட்களை மீனிலேயே அறிவுத்திறனை கூர்மைப்படுத்தும் திறன் அதிகமாக உள்ளது. மேலும் மற்ற உணவுப்பொருட்களான காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது. ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

க்ரீன் டீ:

க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், ஃபாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும்.

பெர்ரிஸ்

பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.

பச்சை இலைக் காய்கறிகள்:

பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தேன்:

தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

நட்ஸ்:

நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.

தண்ணீர்:

மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
Posted by Chief Editor On 12:15 AM

நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.


பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.


கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.



வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.


சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.


பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.
திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்
நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.

திங்கள், 27 மே, 2013

Posted by Chief Editor On 8:44 AM


அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.

மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான்.

அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது.

பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான்.

தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்... குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் போன்ற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின.

இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தது.

இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.
பொழுது விடிய ஆரம்பித்தது! வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்கு அவனைச் சுற்றி இருந்த கற்கள் எல்லாம் தீர்ந்து போய்விட்டன.

அவன் தன் கையில் இருந்த கடைசிக் கல்லைப் பார்த்தான்.

பிரமித்துவிட்டான்.

காரணம் :
அது சாதாரண கூழாங்கல் இல்லை. விலை உயர்ந்த வைரக்கல்.

யாரோ கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்து வந்த வைரக்கற்களை ஆற்றங்கரையிலேயே தவறவிட்டு விட்டு ஓடியிருக்கிறார்கள்.

அவற்றைத்தான் அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.

ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான்.

கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

நீதி : இறந்த காலம் போனது,போனதுதான்..

எதிர்காலம் நாளை என்ன நடக்கும் என்பதை யார் அறிவார்கள்..

நிகழ்காலம் தான் உண்மை.,எதையும் தள்ளிப் போடாதீர்கள்..

இந்த நாள்,இந்த மணி,இந்த நிமிடம்,இந்த நொடி எதையும் வீணாக்காதீர்கள்.

பின்னர் என்ன, வெற்றி உங்கள் காலடியில்...

சனி, 25 மே, 2013

Posted by Chief Editor On 2:39 AM

மத்திய தர வகுப்பினர் அதிகம் வசிக்கும் சென்னை குரோம்பேட்டை, பாரதிதாசன் சாலையின், ஒரு முட்டுச் சந்தில் உள்ள குப்பைத்தொட்டி அருகே பெண் நாய் ஒன்று எப்போதும் ஒண்டிக் கிடக்கும். அநாயவசியமாகக் குலைப்பது, தெருவில் போவோரை மிரட்டுவது, சைக்கிளில் வருவோரை விரட்டுவது, புதிதாக வருபவர்களைப் பயமுறுத்துவது என்று தெரு நாய்களுக்கு உரிய எந்தக் குணமும் இல்லாமல் சாதுவாக முடங்கிக்கிடக்கும்.

தெருவில் உள்ளோர் குப்பைத் தொட்டியில் வீசியெறியும் குப்பைகளில் தனக்கான உணவு இருந்தால் எடுத்துவந்து சாப்பிட்டுவிட்டுச் சாதுவாக படுத்துக்கொண்டு இருக்கும். இந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு குட்டிகளைப் போட்டது.

இரண்டு குட்டிகளுமே ஆண் குட்டிகள். தெரு நாய்க்குட்டிகள் என்றே சொல்ல முடியாதபடி அடர்த்தியான ரோமங்களுடன் படு சுறு, சுறுப்பாகக் காணப்பட்டன. அந்தக் குட்டிகளோடு தாய் நாய் பாசத்தோடு விளையாடுவதை பார்த்து, மனம் பறிகொடுத்து எதிர்வீட்டு மாணவி அஸ்வினி என்பவர் தனது அண்ணன் சுரேஷ் மூலமாக, குட்டி நாய்களுக்கு பால், மற்றும் ரொட்டி போன்ற உணவுகளைக் கொடுத்தார்.

தங்கைக்காக உணவு கொண்டு போன அண்ணன் சுரேஷ் தாயும், சேயும் விளையாடும் அழகையும், அதன் பாசத்தையும் பார்த்துவிட்டு தனது வீட்டில் இருந்த குடையைக் கொண்டுவந்து நாய்க்குட்டிகள் மீது வெயில் படாதவாறு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார். போதும் போதாதற்கு வீட்டில் இருந்த சாக்குகளைக் கொண்டு போய் விரிப்பாகவும் விரித்து வைத்தார்.
கீழே விரிப்பு, மேலே குடை, சாப்பிட பால், ரொட்டி என்று படு குஷியான குட்டிகள் அதிக சந்தோஷத்துடன் விளையாடின.

அவைகளின் சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை, ஒரு நாள் காலை தனது குட்டிகளுக்கு உணவு தேடி நீண்ட தொலைவு ஒடிப்போய், எதையோ கவ்விக் கொண்டு திரும்பிய தாய் நாய்க்கு அதிர்ச்சி. காரணம் குட்டிகள் இரண்டையும் காணவில்லை. கொண்டுவந்த சாப்பாடைக் கீழே போட்டுவிட்டு, யாராவது குட்டிகளைக் கொன்று புதைத்து விட்டதாக எண்ணி, அப்படி ஒரு ஆக்ரோஷத்துடன் மண்ணைத் தோண்டத்தோண்டி தேடிப் பார்த்தது. பிறகு குப்பைத்தொட்டி, அதன் இண்டு இடுக்குவிடாமல் குட்டிகளைத் தேடித்தேடி ஒடியது, ஊழையிட்டு அழுதது.

இத்தனை நாளும் சங்கீதமாக இருந்த நாய்க்குட்டிகளின் சத்தத்திற்கு பதிலாக ஒருவித ஈனஸ்வர ஒலம் வரவும், சுரேஷ் என்னவென்று எட்டிப்பார்த்தார். கொஞ்ச நேரத்தில் நாய்க் குட்டிகள் மீது ஆசைப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ, தாய் நாய் இல்லாத சமயமாகப் பார்த்து தூக்கிக் கொண்டு (திருடிக் கொண்டு) போய் இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டார்.

சுரேஷ்க்கு இரண்டு நாளில் திருமணம், தலைக்கு மேல் ஏகப்பட்ட வேலைகள் காத்துக் கிடந்தன. ஆனாலும் தாய் நாயின் வேதனை எந்த வேலையையும் செய்யவிடாமல் மனதை போட்டு பிசைந்தது. சரியா, தவறா, நடக்குமா, நடக்காதா என்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல், ஒரு "சார்ட்' வாங்கி வந்து, நாயை எடுத்தவர்கள் தயவு செய்து திரும்ப கொண்டுவந்து ஒப்படைக்கவும் என்று, தாய் நாயே எழுதியது போல எழுதி நாய் திருடுபோன இடத்தில் ஒட்டிவிட்டார்.

தாய் நாய்க்கு என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டு இருக்கிறது எனத்தெரியாது. ஆனால் ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் புரிந்தது. எழுதப்பட்ட சார்ட் முன் சாப்பிடாமல் கண்ணீர் விட்டபடியே பகல், இரவு, குளிர், வெயில் பாராது நின்று கொண்டு இருந்தது.

என்ன ஒரு ஆச்சர்யம் இருள் விலகாத ஒரு அதிகாலை வேளையில் நாயை எடுத்தவர், போஸ்டர் வாசகத்தால் மனம் மாறி, யாருமறியாமல் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டார். தாயைப் பார்த்த சந்தோஷத்தில் குட்டிக்கு ஏக சந்தோஷம், குட்டியைப்பார்த்த சந்தோஷத்தில் தாய் நாய்க்கு அதைவிட அதிக சந்தோஷம்.

தங்களது சந்தோஷத்தைச் சத்தமாக குரைத்து பகிர்ந்துகொள்ள, மீண்டும் இந்தச் சங்கீத குரைப்பு சத்தம் கேட்டு மனம் துள்ளிக்குதித்தபடி சுரேஷ்க்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம். இரண்டு குட்டிகளில் ஒன்றாவது கிடைத்ததே என்ற சந்தோஷம். தாய் நாயின் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. நீண்ட நாள் பிரிந்து பின் கூடிய சந்தோஷத்தை உருண்டுபுரண்டு விளையாடி இரண்டும் வெளிப்படுத்தியது.

பாசம் காட்டுவதில் மனிதர்களை மிஞ்சிய இந்த தாய் நாயைப்பார்த்து இப்போது சுரேஷின் கண்களில் கண்ணீர் ஆனால் இது ஆனந்த கண்ணீர்.

-கருத்துக்களம்