ஒரு தொழிலதிபர் 'காலணிகள்' தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை ஓரிடத்தில் நிறுவத் திட்டமிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துமுன், அங்கு தொழிற்சாலை நிறுவ முடியுமா? வெற்றிகரமாக நடக்குமா? விற்பனை வாய்ப்பு எப்படி? என்பதைக் கண்டறிய ஓர் ஆய்வு நிகழ்த்துவதற்காக ஒரு மிகச்சிறந்த வணிகப் பள்ளியில் முதுகலைப் பட்டப் படிப்பில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரைத் தேர்ந்தெடுத்து ஆய்வுப் பணியை ஒப்படைத்தார்.
அந்த இளைஞரும் அந்த இடத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களுக்குச் சென்று மக்களது பழக்க வழக்கங்கள், நிதி நிலை ஆகியவற்றை ஆராய்ந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு ஓர் அறிக்கையைக் கொடுத்தார். அந்த அறிக்கையின்படி அங்குள்ள மக்களுக்கு காலணி அணியும் பழக்கமே இல்லாத காரணத்தால் அங்கு நிறுவ இருக்கும் தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்த இயலாது, அங்கு காலணி விற்பனை செய்யமுடியாது என்பது முடிவு.
இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட தொழிலதிபர் விற்பனையில் முதுகலைப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்ற ஒருவரை அதே ஆய்வைச் செய்யும்படி பணித்தார். முன்னவரைப் போன்றே அந்த இடத்தையும், சுற்றியுள்ள ஊர்களையும் பார்வையிட்டு மக்கள் எவரும் காலணி அணியும் பழக்கமில்லாததைக் கண்டு, சிலருடன் பேசி நான்கு நாட்களிலேயே திரும்பி வந்து அவரது அறிக்கையைத் தொழிலதிபரிடம் கொடுத்து விவரித்தார்.
அவரது அறிக்கைப்படி அந்த இடத்திலும், அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும், காலணி அணியும் பழக்கமில்லாத காரணத்தினால், காலணி அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைத்து, விழிப்புணர்ச்சியைத் தூண்டி விட்டால் மிகச்சிறந்த வெற்றியை அடையலாம்.அதே இடத்தில் மிகப்பெரிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து, நாட்டிலேயே மிகச்சிறந்த தொழிற்சாலையாக மாற்றினார் அத்தொழிலதிபர்.
நினைத்துப் பாருங்கள். அதே இடம், அதே மக்கள், அதே பழக்க வழக்கங்கள், ஆய்ந்தவர்கள் இருவருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரிகள்!
வேறுபாடு - அவர்களது மனப்பான்மை தான். அந்த 'மனப்பான்மை' அளித்த நேர்மறை பார்வைதான்!
அவ்வாறே சரியான மனப்பான்மை படைத்தவர் பாதி கண்ணாடி டம்ளரில் இருக்கும் தேனீரைக் கண்டு 'பாதி டம்ளர் தேனீர் இருக்கிறது' என்று மகிழ்வர். எதிர்மறை மனப்பான்மை படைத்தவர் 'பாதி டம்ளர் வெற்று டம்ளர்' என வேதனை அடைவர்!
மனப்பான்மை என்பது என்ன?
வெற்றிக்கு இட்டுச் செல்லும்
சிந்தனை வழிமுறை
பிறரொடு பழகும் வழிமுறை
நிகழ்வுகளை ஏற்கும் வழிமுறை
எண்ண ஓட்டம்
சிந்தனைச் சிதறல்
மன நிலை
மனப்பாங்கு
மனோபாவம்.
சுருங்கக் கூறின் "ஆளுமையின் ஓர் இன்றி அமையாத பரிமாணம்!
ஆக்கம் - முஹம்மத் ஹுசைன்
(தகவல்:- முஹம்மத் பாஸிர்)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக