செவ்வாய், 25 ஜூன், 2013

Posted by Chief Editor On 8:41 AM

கையில் மதிய சாப்பாட்டுக்கான தூக்குடன் வேக நடைபோட்டு கொண்டிருந்தான் சக்திவேலு. வயசு பன்னிரெண்டுதான் ஆனாலும் வீட்டு வறுமை புத்தகப்பையை தூக்கிபோட்டு விட்டு தூக்குசட்டியோடு வேலைக்கு போகவைத்தது. "காலைல எழுத்ததே நேரம்கழிச்சு தான், இதுல அம்மா சமைக்கவும் தாமதம், அண்ணாச்சி திட்டபோறாரு என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடியே பாதி நடையும் பாதி ஓட்டமுமாக அவனது ஆட்கள் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் .

"தினமும் சார் நேரம்கழிச்சுதான் வருவீங்களோ? உனக்காக இத்தன பேரு காத்துகேடக்கனுமா?" என்று ஆத்திரமாய் கேட்டார் மேஸ்திரி மாணிக்கம். "சரி விடுங்க அண்ணாச்சி சின்ன பையந்தான போகப்போக சரியாயிடுவான்" என்று மாணிக்கத்தை சமாதான படுத்தினார் ராமன். "என்னாய்யா உன் தோஸ்த் பையன்னு பாசமா? இஞ்சினியர் வண்டியனுப்பி அரைமணி நேரத்துக்கு மேலாகுது நீயா பதில் சொல்லுவ?" என்று ராமனை பார்த்து கேட்டார் மாணிக்கம். "உனக்கு இது தான் கடைசி, இன்னொருதரம் நேரமாச்சி அப்புறம் வேற வேலை தேடவேண்டியதுதான்" மிரட்டியபடியே வண்டியில் ஏறினார். அவரை தொடர்ந்து மற்ற வேலையாட்களும் வண்டியில் ஏற சக்திவேலுவும் ஏறி உட்கார்ந்தான். வண்டி நகர ஆரம்பித்ததும் "மாணிக்க அண்ணே இன்னைக்கு எந்த ஏரியாக்கு இஞ்சினியர் வர சொல்லிருக்காரு" என்று வண்டியிலிருக்கும் ஒரு பெண் கேட்க, "நம்ம பக்கத்தூர் கவர்மெண்ட் பள்ளிகூடத்துக்கு வர சொல்லியிருக்காரு அங்கதான் வேலையாம்" என்றார் மாணிக்கம்.

உடனே சக்திவேலுக்கு மனதில் சந்தோசம் உண்டானது பிரபு, செல்லத்துரை, பாண்டி, சாந்தி டீச்சர் எல்லாரும் மனதுக்குள் வந்துபோனார்கள்."இவ்வளவு சீக்கிரம் மீண்டும் அங்க போவோம்ன்னு நினைக்கவே இல்ல" என்று மனதுக்குள் முனுமுனுத்தான். வண்டி பள்ளிக்குள் நுழையும்போது அவன் மனதில் ஏதேதோ உணர்வுகள், அப்பா இருந்திருந்த நானும் இப்போ கிளாஷ்ல உட்கார்ந்து படிச்சுகிட்டு இருப்பேன் இப்படி கூலி வேலைக்கு அனுப்பிருக்க மாட்டார் என்று அவன் மனம் பழைய நினைவுகளை யோசித்தபடியே இருந்தது.

அனைவரும் வண்டியில் இருந்து இறங்கி பள்ளியை நோட்டம் விட்டபடியே இருந்தனர். பள்ளி முழுவதும் திருவிழா போல அலங்காரம் செய்யப்பட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் தாய்மண்ணே வணக்கம் பாடல் ஒலிபெருக்கியில் ஒலித்து கொண்டிறிந்தது. மாணிக்கம் இஞ்சினியரிடம் போனான் "என்னா சார் கவர்மெண்ட் ஸ்கூல்ல பாட்டெல்லாம் பாடிகிட்ருக்கு ஆண்டுவிழாவா?" என்று கேட்டான். "இல்ல மாணிக்கம் இன்னைக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாம் அது நிகழ்ச்சி நடத்துறாங்க நம்ம ஊரு எம்.எல்.ஏ கூட வராராம் அதுக்காக மேடை ஏற்பாட்டுக்கு தான் நம்மகிட்ட சொல்லிருக்காங்க" என்று சொல்ல "பண்ணிடலாம் சார் நம்ம ஆளுங்கள விட்ட மதியதுக்குள்ள ஏற்பாடு பண்ணிடுவாங்க" என்றார். "மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்குது ஒரு மணிக்குள்ள நீங்க முடிச்சுகொடுக்கணும்" என்று சொன்னார் இஞ்சினியர்.

சக்திவேல் வண்டியிலிருந்து இறங்குவதைபார்த்த இஞ்சினியர் "மாணிக்கம் பையன் யாரு புதுசா இருக்கான்?" என்று கேட்டார், "என்கிட்டே வேலை செஞ்ச முத்துவோட பையன் சார். பாவம் பத்துநாளைக்கு முன்னாடிதான் அவன் அப்பன் பஸ்ல வரும்போது ஏதோ ஒரு கட்சி தலைவர கைது பண்ணிட்டாங்கன்னு பஸ் மேல கல்ல விட்டு எறிஞ்சாங்க, அவங்க கட்சிகாரங்க அந்த கல் அவன் தலைமேல பட்டு அந்த இடத்துலேயே உசுரு போய்டுச்சு. இப்ப படிக்கிற வயசுல இந்தப்புள்ள வேலைக்குவருது" என்றபடியே பெருமூச்சு விட்டார் .

" சரி விடுங்க எல்லாம் விதி. நீங்க இருந்து விழா முடிஞ்சதும் மேடைய கலைச்சுடுங்க, வேலை முடிஞ்சதும் அந்த பையன விழாமுடியர வரைக்கும் ஸ்கூல்ல எங்காவது மறைஞ்சிருக்க சொல்லுங்க சின்ன பையன வேலைக்கு வெச்சா பிரச்சனை ஆ யிடும்" என்றார் இஞ்சினியர். "சரிங்க சார் விழா முடியரவரைக்கும் அந்த பக்கம் வராம பாத்துகறேன்" என்று சொன்னார் மாணிக்கம்.

அங்கு விளையாடி கொண்டிருந்த செல்லதுரையும், பாண்டியும் சக்திவேலை பார்த்ததும் அவனிடம் ஓடிவந்தார்கள், "டேய்! சக்திவேலு எப்படிடா இருக்க ஏன்டா ஸ்கூல் வரதே இல்ல? டீச்சர் எல்லாரும் கேட்டுகிட்டே இருந்தாங்கடா" என்று கேட்க, "இனிமே நான் ஸ்கூல் வரமாட்டேண்டா, என் அப்பா செத்துபோச்சு இல்ல இனிமே நான் தாண்டா வேலைக்கு போகணும்" என்று கூறிகொண்டிருக்கும் போதே அங்கு மாணிக்கம் வந்தார் "டேய்! வந்ததும் என்னடா பேச்சு" என்று கேட்க, சக்திவேல் மௌனமாய் மாணிக்கத்தை பார்க்க "அண்ணே! இது அவன் படிச்ச ஸ்கூல்ண்ணே கூட படிச்ச புள்ளைங்க அவன பாத்ததும் ஆசையா பேசுதுங்க" என்று ராமன் சொன்னார். "சரி சரி மதியதுக்குள்ள வந்த வேலை முடியனும்டா அதான்" என்றபடியே நகர்ந்தார்.

மேடையை ரெடி பண்ண ஆட்கள் மும்மரமாய் வேலை செய்துகொண்டு இருந்தார்கள் அவர்களுக்கு சக்திவேலும் பலகைகளை எடுத்துகொடுப்பது, ஆணி அடிப்பது போன்ற சிறு வேலைகளை செய்துகொண்டிருந்தான். வேலையின் நடுவே அவனது கண்கள் மேடையில் கட்ட வைத்திருக்கும் திரையையே பார்த்தது திரையில் "குழந்தை தொழிலாளர் ஒழிப்புதினம்" என்று எழுதி அதன்கீழ் "பிள்ளைகளின் வருமானம் பெற்றவருக்கு அவமானம்" என்று இருந்தது.

அவன் அதை படித்தபடியே வேலை செய்துகொண்டிருக்கும் போது மேடை வேலைகளை பார்வையிட அங்கு வந்த தலைமை ஆசிரியர் அவனை பார்த்தார், "நீ சக்திவேலுதான?" என்று கேட்டார்."ஆமா சார்" என்றான் சக்திவேல் "என் பள்ளிகூடத்துக்கு வரதில்ல?" என்று கேட்க, பதில் பேசாம அவன் நிற்க "சார் அவன் அப்பனும் இறந்து போயிட்டான், அவன் அம்மாவுக்கும் வாய் பேசமுடியாது பாவம் அவன் என்னா சார் பண்ணுவான்?" என்று சொன்னார் ராமன். "நான் உதவிபண்ணா படிக்கிறயா?" என்று அவர் கேட்க ராமனுக்கு சந்தோசமானது அவர் சொன்னதை கேட்டதும். 

"வேண்டாம் சார் நான் படிக்கல" என்றான் சக்திவேல்.
"ஏன்டா வேண்டாம்னு சொல்லற?" என்று ஆசிரியர் கேட்க மௌனமாய் நின்றான் சக்திவேல்.
"சொல்லுடா என் போகலைங்கிற?" என்று ராமன் கேட்க,
அழுதபடியே சக்திவேல் சொன்னான் "நீங்க உதவி பண்றதுல நான் படிக்கலாம் ஆனா என் அம்மாக்கு என்னால சாப்பாடு போடமுடியாது. நான் வேலைக்கு போனாதான் என் அம்மாவ பாத்துக்கமுடியும். இந்த போர்டுல எழுதியிருக்கிறத போல என் வருமானம் என் அம்மாக்கு அவமானம் இல்ல சார்" என்று சொல்ல தலைமை ஆசிரியர் எதுவும் பேசாமல் அந்த திரையில் எழுதி இருந்த வாசகத்தை பார்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

சிறிது நேரத்தில் வேலைகள் முழுவதும் முடிந்து மேடை அலங்காரமாய் காட்சியளித்தது.

விழா ஆரம்பம் ஆனது சக்திவேல் தனியாக ஒரு வகுப்பறையில் அமரவைக்க பட்டிருந்தான். அவனது ஆட்கள் விழாவை பார்க்க சென்றுவிட்டனர், தனியாக இருப்பதை நினைத்து சக்திவேல் கவலை கொள்ளவில்லை மாறாக அவனுக்கு சந்தோசமாகவே இருந்தது. அது அவன் படித்த வகுப்பறை, மீண்டும் பள்ளியில் நம் வகுப்பிலே உட்காருவோமா? என்று நினைத்து அழுத அவனுக்கு அவர்கள் மறைவாய் இருக்க சொன்னது சந்தோசமாகவே இருந்தது. வகுப்பறையில் அமர்ந்திருப்பது ஒரு சில மணி நேரங்களே என்று தெரிந்தும் அவன் மனம் முழுவதும் சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தது. நிஜம் கிடைக்காது என்று தெரிந்ததும் நிழலை நேசிக்க கற்றுகொடுத்திருந்தது அவனது ஏழ்மை. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக