ஞாயிறு, 16 ஜூன், 2013

Posted by Chief Editor On 7:13 AM

இன்று(16-06-2013) அகிலவுலக தந்தையர் தினமாகும்.

மேலைநாடுகளில் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்ற இந்நாள்பற்றி நமக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது ஊடகங்களின் வாயிலாக கொஞ்சமாய் தெரிந்துவைத்திருப்போம்.

நண்பர்களுக்காக..
அன்னையர்களுக்காக..
காதலர்களுக்காக.. என்று
எல்லாவற்றிற்கும் ஒரு நாள் இருக்கையில்,
நம்மை விதைத்த தந்தையர்களுக்காகவென்று
ஒருநாள் இருக்கக்கூடாதா..?

வாருங்கள்..
தந்தையர்நாளை கொண்டாடும்முன் அந்நாள்பற்றிய வரலாறை தெரிந்துகொள்ளலாம்.

இணையத்தில் கிடைத்தனவற்றை சிறிய அளவில் தொகுத்துள்ளேன்.

படித்துவிட்டு இந்நாளை கொண்டாடுங்கள்.

William Jackson Smartஎன்றொரு மனிதர்.

1842ஆம் ஆண்டு ஜூன்மாதம் ஐந்தாம்நாளில் பிறந்த இவர்,
அமெரிக்க காவற்படையில் பணிபுரிந்தார்.

இவரின் மனைவி Ellen Victoria Cheek Smart.

இவர்களுக்கு ஆறு குழந்தைகள்.

முதற்குழந்தைமட்டும் பெண்குழந்தை.
அவரின் பெயர் Sonora Smart Dodd.

ஆறாவது குழந்தையை பெற்றெடுக்கும்போது
இறந்துபோகிறார் Ellen Victoria.

அப்போது Sonoraவிற்கு பதினாறு வயது.

அமெரிக்காவிலோ உள்நாட்டுப்போர்.
காவற்படையிலிருந்த Williamsக்கோ பெருஞ்சுமையான பணிச்சூழல்.

இந்நிலையில் மனைவியின் இறப்புவேறு.

ஆனால் இதற்கெல்லாம் துவண்டுபோகவில்லை Williams.

மறுமணஞ்செய்துகொள்ளாமலேயே
தனியாகவே தன் ஆறுகுழந்தைகளையும்
கூடவே உள்நாட்டுப்போரின் விளைவால் பெற்றோரை இழந்த வாய்பேசவியலாத குழந்தையான Marshellஐயும்
அரும்பாடுபட்டு வளர்க்கிறார் அவர்.

இதையெல்லாம் கூடவே நின்று பார்த்து மனம் நெகழ்கிறார் அவரின் மகளான Sonora.

அப்பாவிற்காக ஏதாவது செய்யவேண்டுமென்று அவரின் பாசவுள்ளம் துடிக்கிறது.

அப்போது அமெரிக்காவில் "அன்னையார்நாள்"
பெரிதாகக்கொண்டாடப்பட்டிருந்த காலம்.

அதேபோன்று அப்பாக்களுக்காகவும் ஒருநாளை கொண்டாடினாலென்னவென்று
Sonoraவின் மனதுள் கேள்வியெழுகிறது.

இதற்காக அங்கேயிருந்த உள்ளாட்சியமைப்புகளின் வாயிலாக தேவாலயத்தில் அருட்தந்தையாக இருந்தவரிடம்
தன் தந்தையின் பிறந்தநாளான ஜூன் ஐந்தாம்நாளை தந்தையர்களுக்கான நாளாக அறிவிக்கவேண்டுமென
வேண்டுகோள்விடுக்கிறார்.

அங்கேயிருந்தவர்கள் அனைவருக்குமே Williamsன் நன்மனது புரிந்தமையால் எல்லோரும் ஒப்புதலளிக்கின்றனர்.

இருந்தபோதிலும் உடனடியாக அறிவிக்கமுடியாதெனவும் மேற்சபையின் ஒப்புதலை பெற்றபின்னர்
மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அதுபற்றி அறிவிக்கிறேனென்கிறார்.

அதன்படி 1910-ஜூன்-19ஆம் நாளை தந்தையர் நாளாக அறிவிக்கிறார் அருட்தந்தை.

இது,
அந்த பகுதியில் மட்டுமே கொண்டாடப்பட்டது.

ஆனால் என்ன காரணத்தாலோ
தந்தையர்நாளின் கொண்டாட்டங்கள் இல்லாமற்போகின்றன.

இதற்கிடையே, Williams 1919ஆம் ஆண்டில் இறந்துபோகிறார்.

இறக்கும்வரையிலும் தம் குழந்தைகளுக்காகவே
வாழ்ந்து அவரின் குழந்தையையும் போரினால் அனாதையாக்கப்பட்ட குழந்தையையும் நன்றாய் வளர்த்த அவரின் மறைவு,
Sonoraஐ துன்பத்திலாழ்த்துகிறது.

இதற்கிடையே தந்தையர்நாள் கொண்டாடப்படுவதும் நின்றுபோனதால் என்னசெய்வதென்றே தெரியவில்லை Sonoraவிற்கு.

இருந்தபோதிலும் மனந்தளராமல் அரசாங்கத்திடம் போராடி,
தந்தையர்நாளை அரசாங்கமே அறிவிக்கச்செய்கிறார்.

எப்போது தெரியுமா?
1972ஆம் ஆண்டில்தான் அறிவிக்கிறார்கள்..

அமெரிக்க அரசாங்த்தின் அதிபர் Nixonதான் இதை அறிவிக்கிறார்.

அதன்பிறகு ஒவ்வோராண்டும்,
ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர்நாளாக கொண்டாடுகின்றனர் மேலைநாட்டினர்.

நம் பண்பாட்டிற்கொவ்வாத மேலைநாட்டின் பல பண்பாடுகளை
நம் பண்பாட்டிலும் உட்புகுத்திக்கொண்ட நாம்,
இதுபோன்ற நல்லனவற்றையும் எடுத்துக்கொண்டால் நன்றாயிருக்குமே..!

அமெரிக்காவில் எங்கோ பிறந்த Williamsக்காக
நாம் இந்த நாளை கொண்டாடவேண்டாம்.

அந்நாளின் பெருமையை அடியொற்றி,
நமக்காகவே வாழ்ந்து
நமக்காக வெயிலென்றும் மழையென்றும் பாராமல்
உழைத்துவுழைத்து ஓடாகிப்போன
நம் அப்பாவின் மனதிற்காகவும்;
நாம் பிறப்பதற்காக
நம்மை தன் வயிற்றில்
பத்துமாதம் சுமந்தவர் நம் தாயென்றாலும்,
நாம் வளர்வதற்காக
ஆண்டுதோறும்
தன் முதுகில் மூட்டைச்சுமப்பவர்
நம் தந்தையென்பதால்,
அவரின் பாசத்திற்கு நன்றிநவிலும்பொருட்டும்
இந்நாளை நாம் கொண்டாடலாமே..?

சரி.

இந்நாளை எப்படிக்கொண்டாடலாம்?

அப்பாவிற்கு வாழ்த்துசொல்லலாமா?
சொல்லலாம் சொல்லாமலுமிருக்கலாம்.

அதைவிட,
அப்பாவின்  ஆசிபெறலாம்.

அப்பாவிற்கு பிடித்தவுணவுகளை வீட்டில் சமைக்கச்சொல்லலாம்.

அப்பாவை இழந்தவர்கள் அப்பாவின் நினைவுகளில் கொஞ்சம் மூழ்கிப்போகலாம்.

எல்லாமே நம் மனதில்தானுள்ளது.

இந்நாளில்,
என் நண்பர்களின் தந்தையர்களுக்கும்
தந்தையர்களாக உள்ள என் நண்பர்களுக்கும்
என் மனங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முத்தாய்ப்பாக,
என் பழைய குறுங்கவிதையொன்றுடன் முடிக்கிறேன்.

ஆயிரமாயிரம் சாட்சியங்களிருந்தும்
இன்னும்
ஆவணப்படுத்தப்படாமலேயே உள்ளது...!
தாயன்பிற்கு நிகரான
தந்தையர்தம் பெருமை.

- ஃபீனிக்ஸ் பாலா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக